Thursday, July 23, 2009

திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து


திமுக‌ என‌க்கு முழு உரிமை த‌ந்துள்ள‌து
ம‌ன‌ம் திற‌க்கிறார் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அப்துர் ர‌ஹ்மான் ( ச‌ம‌ர‌ச‌ம் ஜுலை 16 31 )



* உங்களின் இளமைக்காலம், பெற்றோர், படிப்பு ஆகியன குறித்து சொல்லுங்களேன்...
காயிதே மில்லத் (ரஹ்) அவர்களோடும் சிராஜுல் மில்லத் அப்துல் சமத் அவர்களோடும் என் தகப்பனாருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததுண்டு. என்னுடைய பாட்டனாரும் முஸ்லிம் லீகில் ஆரம்பக் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர். ஆக என்னுடைய பரம்பரையே முஸ்லிம் லீக்குடன் ஈடுபாடு கொண்டு இருந்ததால் சிறு வயதிலிருந்தே எனக்கும் முஸ்லிம் லீக் மீது ஈடுபாடு இருந்தது. சமூக, அரசியல் ரீதியாக சமுதாயத்தை சரியான பாதையில் முஸ்லிம் லீக்கால் மட்டுமே செலுத்த முடியும் என்பது சிறுவயதிலிருந்தே என் எண்ணத்தில் பதிந்த ஆழமான அழுத்தமான நம்பிக்கை. அந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும், வலிமைப்படுத்த வேண்டும் எனும் எண்ணம் இருந்தாலும் கூட ஆங்காங்கே உள்ள பலவீனங்கள் முஸ்லிம் லீக் வளர்ச்சியிலே சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். பலவீனங்கள் இருக்கின்றன என்பதனால் நாம் ஒரு மாற்று அமைப்பை ஏற்படுத்தி விட முடியாது.
என்னுடைய படிப்பு என்பது என்னுடைய பாட்டனார் துவக்கி வைத்த ஆரம்பப் பள்ளியில் 1 முதல் 5 வது வரை படித்தேன். என்னுடைய சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை. ஒரு காலத்தில் நம்மவர்கள் படிப்பதற்கு என்று தனியாக பள்ளி இல்லாத காலத்தில் மதரஸதுல் முஹம்மதிய்யா என்ற ஆரம்பப் பாடசாலையை மார்க்கக் கல்வி போதனையோடு என்னுடைய பாட்டனார் அரசாங்க அங்கீகாரத்தோடு ஆரம்பித்தார். அந்தப் பள்ளியில்தான் நான் 1 முதல் 5 வரை முடித்தேன். இப்பொழுது அந்தப் பள்ளியின் பொருளாளராக நான் இருக்கிறேன். அதன் பிறகு ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியில் 6 முதல் 10 வரை என்னுடைய படிப்பை முடித்தேன். பிறகு கல்லூரிப் படிப்பு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில். மாஸ்க் ஹாஸ்டல் என்று சொல்லப்படுகிற ஏழை மாணவர்கள் அதிகமாகத் தங்கிப் படிக்கிற விடுதியில் தங்கிப் படித்தேன். அங்குதான் என்னுடைய பட்டப் படிப்பையும் முதுகலை படிப்பையும் முடித்தேன்.
* நீங்கள் சிறுவயதிலிருந்தே முஸ்லிம் லீக்குடன் இணைந்து இருக்கிறீர்கள். ஆனால் இப்பொழுது முஸ்லிம் லீக்கில் இளைஞர்களே இல்லை எனச் சொல்லப்படுகிறது, இது சரியா?
இல்லை; இது தவறான கருத்து. அந்தந்தப் பகுதிகளில் அமைப்பை வழி நடத்தக் கூடியவர்களின் பலவீனங்களால் சில இடங்களில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. சில பகுதிகளில் முஸ்லிம் லீக் நல்ல வலிமையோடு இருக்கும். சில பகுதிகளில் நடுத்தரமாக இருக்கும். சில பகுதிகளில் பலவீனமாக இருக்கும். சில பகுதிகளில் கிளை கூட இல்லை என்பதை நாம் மறுக்க முடியாது. உடனே தலைமையைக் குறை சொல்லி விட முடியாது. அந்தந்தப் பகுதிகளில் பொறுப்பாளர்களின் வீரியத் தன்மையைப் பொறுத்து அமைப்பின் செயல்பாடுகளின் வலிமை இருக்கும். இளைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் எல்லாரும் முஸ்லிம் லீகில்தான் இருக்கிறார்களா என்றால் இல்லை. மற்ற இயக்கங்களில் இளைஞர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். வீரமாகச் செயல்பட வேண்டும், புரட்சியாகச் செயல்பட வேண்டும் என்றெல்லாம் கூறி நல்லிணக்கத்தைக் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய இயக்கங்கள் இளைஞர்களை சரியாக வழிநடத்தவில்லை என்பதை உணர்ந்து சமுதாயப் பணி ஆற்ற சரியான களம் முஸ்லிம் லீக்தான் என்பதை உணர்ந்து பல இளைஞர்கள் முஸ்லிம் லீக்கில் இணைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
* வேலூர் தொகுதியின் வேட்பாளராக முதலில் பேராசிரியர் காதர் மொய்தீன் பெயர்தான் அறிவிக்கப்பட்டது. பிறகு உங்கள் பெயரை அறிவித்தார்கள். உண்மையில் என்ன நடந்தது?
இதில் ஒன்றும் இரகசியம் இல்லை. செயற்குழு கூட்டத்தில் "கடந்த முறை வேட்பாளராக நின்று 5 ஆண்டுகள் பணி ஆற்றினேன். ஆனால் இந்த முறை என்னால் வேட்பாளராக நிற்க முடியாது. நமது கட்சியின் சார்பாக புதிய வேட்பாளர் ஒருவரை அறிமுகம் செய்ய வேண்டும்' என்று பேராசிரியர்தான் முன்மொழிந்தார்.
ஆனால் செயற்குழுவில் வந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக நீங்கள்தான் மறுபடியும் நிற்க வேண்டும் என்று வற்புறுத்தியதால் பேராசிரியர் அவர்கள் மனமின்றி ஒப்புக் கொண்டார்.
அதன் பிறகு பேராசிரியருக்கு ஏணி சின்னத்தில்தான் அதாவது சொந்தச் சின்னத்தில்தான் நிற்க வேண்டும். வேறு கட்சியின் சின்னத்தில் நிற்பதை மாற்றியாக வேண்டும் என்பது முஸ்லிம் லீக்கில் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அத்தகைய நிலையில் பேராசிரியர் ஏணி சின்னத்தில் நிற்பார் என்று அறிவித்து இருந்தோம்.
ஆனால் இரண்டு காரணங்களால் இந்த முடிவு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. 1. ஏணி சின்னம் என்பது மக்கள் மனதில் ஒரு சுயேட்சை சின்னம்தான் என்றிருக்குமே தவிர அது முஸ்லிம் லீக்கின் சின்னம் என்று பதிய வைக்க முடியாது. இந்தச் சின்னத்தை பஞ்சாயத்து தேர்தல், நகராட்சி, மாநகராட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல் எனப் படிப்படியாக கொண்டு வந்து அதன் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கலாமே தவிர திடீரென பாராளுமன்றத் தேர்தல் என்ற மிகப் பெரிய சமுத்திரத்தில் கொண்டு சென்று நிற்பது என்பது சொந்தச் சின்னத்தில் நின்றோம் என மார் தட்டிக் கொள்ளலாமே தவிர நமது இலக்கான பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோமோ என்ற கவலையும் பலருக்கு இருந்தது.
இத்தகைய நிலையில் உதயசூரியன் சின்னத்தில் நிற்போம் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பேராசிரியர் அவர்கள் முஸ்லிம் லீக்கின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருப்பதனால் அவர் வேறு கட்சியின் சின்னத்தில் நிற்க முடியாது. இத்தகைய நிலையில் மாநில செயற்குழு மீண்டும் கூடி என்னை வேட்பாளராக்குவது என்றும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
* திமுக சின்னத்தில், திமுக உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நீங்கள் ஒரு முஸ்லிம் லீகராக செயல்பட முடியுமா?
நிச்சயமாக முடியும். முஸ்லிம் லீக்கின் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் முழுமையாகச் செயல்படக் கூடிய உரிமையை திமுக தந்திருக்கிறது. திமுகவே வெளியிடுகின்ற அறிக்கைகளில் கூட முஸ்லிம் லீக் வேட்பாளர் என்றுதான் சொல்கின்றார்களே தவிர, திமுக வேட்பாளர் என்று சொல்லவில்லை. அத்தகைய அங்கீகாரத்தை அவர்கள் தருகிறார்கள். நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் ஒலிப்பதற்கு திமுக எத்தகைய இடர்பாடும் செய்வதில்லை. நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுடன் பேசும் பொழுதும் கூட சிறுபான்மை சமுதாயத்தின் விஷயங்களை முழுமையாக எடுத்து வைக்கும்படியும் அதில் எந்தத் தயக்கமும் காட்ட வேண்டாம் என்றும் அவர்களே சொல்கிறார்கள். அதனடிப்படையில் சமுதாயத்தின் எண்ணங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் என்னுடைய பணி தொடரும்.
* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததா?
நிச்சயமாக. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம் தொடர்ந்து அந்தத் தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் நல்லவர்கள்; ஒழுக்கமானவர்கள்; சராசரி அரசியல்வாதி போல் செயல்பட மாட்டார்கள்; ஆக்கபூர்வமான அரசியல் செய்பவர்கள் என்ற கருத்து தொகுதி மக்களிடையே இருக்கிறது. அதே போன்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் அரசு செய்திருக்கிற சாதனைகள் ஏழை எளிய அடித்தள மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. அவற்றை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள் முன்னால் தேர்தலில் ஒரு சவால் என்று வருகின்ற பொழுது ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற உந்துதல் மக்களிடம் இருந்துள்ளது. ஆக இந்த இரண்டு காரணங்களாலும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது.
* தேர்தலில் உங்களுக்குக் கிடைத்த சமுதாய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
அந்தத் தொகுதியைப் பொறுத்தவரை சமுதாயத்தின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. எத்தகைய நிலையிலும் சமுதாயத்தின் எண்ணங்கள் மாறுபட்டு இருக்கவில்லை. இத்தனைக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சமுதாயத்தினரின் வாக்குகள் இந்தத் தேர்தலில் எனக்குக் கிடைத்துள்ளன. முஸ்லிம் சமுதாயத்தின் விழுக்காடு 13 முதல் 15 சதவீதம் மட்டுமே. சமூக ரீதியாகத் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்று இந்தத் தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. அதனடிப்படையில் நமது உணர்வுகளை மதிக்கக் கூடிய, கூட்டணி தர்மத்தைப் பேணக் கூடிய எந்தத் தலைமை இருக்கின்றதோ அத்தகைய தலைமையோடு ஒத்துப் போய் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் நமது பிரதிநிதித்துவத்தை எப்படி அடைய முடியுமோ அப்படி அடைய சிந்தித்துச் செயல்படக் கூடிய தலைவர்களால் மட்டுமே சமுதாயத்தை வழிநடத்த முடியும். அந்த வகையில் முஸ்லிம் லீக் தன்னுடைய பணியைச் சரிவர நிறைவேற்றி இருக்கிறது என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.
* வேலூர் தொகுதியின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்கள் தீட்டியுள்ளீர்கள்? எந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?
வேலூர் நாடாளுமன்ற தொகுதி ஏழை மக்கள் அதிகம் வாழக் கூடிய தொகுதி. இன்னும் பல துறைகள் தன்னிறைவு பெறாத தொகுதி. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ அத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதனடிப்படையில் முதலாவதாக குடிநீர்த் திட்டம், அடுத்து சுகாதார வசதி, மருத்துவமனை, அடுத்து சாலை மேம்பாடு, அடுத்து கல்வித்துறை. கல்வி நிலையங்களை ஏற்படுத்துவது, புதிய கல்லூரிகள், கல்வி நிறுவனங்களின் விரிவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் செயலாற்றத் திட்டமிட்டுள்ளேன். மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையுடன் நம் சமுதாயப் பிரமுகர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி எந்தெந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து செயல்பட முடியுமோ அதன்படி இன்ஷா அல்லாஹ் செயல்படுவேன்.
* நீங்களே ஒப்புக் கொண்டீர்கள், வேலூர் தொகுதி ஏழை மக்கள் அதிகம் வாழும் தொகுதி என்று! கடந்த 60 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் ஏராளமான பீடித் தொழிலாளர்கள் மருத்துவம் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வறுமையிலும் நோயிலும் வாடி வருகிறார்கள். அவர்களின் கல்வி பொருளாதார மறுவாழ்விற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
பீடித் தொழிலாளர்களின் நிலை உடனடியாக மாற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டாலும் கூட அதனைத் தொடர்ந்து குலத் தொழிலாகச் செய்து வருபவர்களுக்கு மத்தியில் உடனடி மாற்றம் கொண்டு வருவது இயலாததாகும். பீடித் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு என்னென்ன நலத்திட்டங்கள் கொண்டு வர முடியுமோ அவற்றைக் கொண்டு வர முயற்சி செய்வேன். அவர்களின் நிலை மேம்பாடு அடைய அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற வேண்டும். அதன் மூலம் மட்டுமே அவர்களின் நிலை மேம்பாடு அடையும். பொருளாதாரத் தீர்வு என்பதெல்லாம் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல், அவரவர் நிலைகளுக்கு ஏற்றாற் போல மாறுபடும். ஆக பொருளாதார முன்னேற்றம் என்பதெல்லாம் ஒரு தற்காலிகத் தீர்வாகுமே தவிர அரசாங்கமே முன்வந்து ஏதேனும் நலத்திட்டங்களை வழங்கி கடனுதவிகள் வழங்கி செயல்பட்டாலும் உடனடியாக அவர்களுடைய வாழ்வில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது. இதற்கு ஒரே தீர்வு பீடித் தொழிலை குலத் தொழிலாகச் செய்து கொண்டு வருகின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை முடித்து மேல்படிப்பு கற்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். பீடித் தொழிலாளர்களின் குடும்பங்
களில் கல்வி விழிப்பு உணர்வை ஏற்படுத்தி அவர்கள் குடும்பங்களில் படித்த பட்டதாரிகள் வெளிவந்து கொண்டே இருக்கிறார்கள் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய ஆவல். இந்த ஆவலைப் பூர்த்தி செய்ய முழு கவனம் செலுத்துவேன். இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு வீடாக படித்தவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். தனிப்பட்ட முறையில் என்னால் ஒவ்வொரு வீடாகச் செல்ல முடியாவிட்டாலும் கூட அந்தந்தப் பகுதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக பீடித் தொழிலாளர்கள் குடும்பங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு படித்தோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்படும். அதற்காக நானும் துஆ செய்கிறேன். நீங்களும் துஆ செய்யுங்கள்.
* உள்ளூர் வேட்பாளரையே தேர்தலுக்குப் பிறகு பார்ப்பது அரிதாகி விட்ட இன்றைய அரசியல் சூழலில் வெளியூர்க்காரரான நீங்கள் உங்கள் தொகுதி மக்களின் மனக்குறையை எப்படிப் போக்குவீர்கள்?
வேலூர் மக்களைப் பொறுத்தவரையில் உள்ளூர்க்காரரா வெளியூர்க்காரரா என்று பார்ப்பதில்லை. நல்ல எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றுகிறார்களா என்றுதான் பார்க்கிறார்கள். அதனடிப்படையில் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். தொகுதி மக்கள் என்னை நேரடியாகச் சந்திப்பதற்கும் அவர்களின் கோரிக்கைகளையும் மனுக்களையும் பெறுவதற்கு வேலூரிலே அலுவலகம் அமைத்து, அதிகப்படியான நேரம் தொகுதியிலே இருப்பதற்கும், தொகுதி முழுவதும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்வதற்கும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தொகுதி மக்களின் மனக்குறையை முழுமையாகப் போக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது; என் தொகுதி மக்களுக்கும் இருக்கிறது.
* வக்ஃபு வாரியத்தின் புதிய தலைவராக கவிக்கோ அப்துர் ரஹ்மான் நியமிக்கப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்கள் நல்லவர். சிறந்த மனிதர். சமுதாயம் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக கல்வித் துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டப்படக் கூடியவை. அதனடிப்படையில் வக்ஃபு வாரியத்தின் தலைவராகத் திறம்படச் செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவருடைய பணிகள் சிறப்பாக அமையும்.
* வக்ஃபு வாரியத்தின் பணிகளை மேம்படுத்த நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன?
ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது. கவிக்கோ அப்துர் ரஹ்மான் அவர்களின் அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது நாம் எல்லாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு அவருடைய பணிகள் பட்டறிவுடனும் சிறப்பாகவும் அமையும்.
* சமுதாயத்தில் ஒற்றுமை மலர என்ன செய்ய வேண்டும்?
சமுதாயத்தில் சிதறிக் கிடக்கின்ற அமைப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தலைமையின் கீழ், ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்பட்டால்தான் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளும் பிரதிநிதித்துவமும் முழுமையாகக் கிடைக்கும். நாளுக்கு நாள் சிதறுண்டு போவதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையை சமுதாயத் தலைவர்கள் உணர வேண்டும். சிதறிப் போயிருக்கின்ற சமுதாயத்தின் தலைவர்கள் எல்லாம் ஏதோ தங்களையும் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதிக் கொண்டு தாமும் ஏமாந்து சமுதாயத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சமுதாயத்தின் சக்தி நாளுக்கு நாள் வீணாகிக் கொண்டிருக்கிறது என்கிற கவலை சமீப காலமாக எனக்கு அதிகரித்து உள்ளது. ஆகவே, சிதறிப் போய் இருக்கிற சமுதாயத்தை ஒன்றிணைக்க நான் கடுமையான முயற்சி எடுத்து இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் இனிமேலும் சமுதாயத்தை ஒன்றிணைக்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
* சார்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; மாற்று அரசியலுக்கு வழி காண வேண்டும் என ம.ம.க. இந்த தேர்தலில் களம் இறங்கி படுதோல்வி கண்டுள்ளது. இது குறித்து...?
இந்தத் தோல்வி குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். தமுமுகவின் மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், மேலிடப் பிரதிநிதிகள் ஆகியோருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக ம.ம.க. அறிவிக்கப்பட்ட உடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எப்படியும் ஒரு சீட் கிடைக்கும் என்ற சந்தோஷம் எனக்கு இருந்தது. ஆனால் சிறு சிறு விஷயங்களைப் பெரிதாக்கிக் கொள்வதனால் நமது பிரதிநிதித்துவம் என்கிற இலக்கை அடைவதில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்றுதான் நினைக்கிறேன். ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கிடைக்கப் பெற்ற ஒரு தொகுதியினைக் கையகப்படுத்தி இருந்தால் முஸ்லிம் சமுதாயத்தின் இன்னும் ஒரு வேட்பாளர் இன்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்திருப்பார். இனி வருகின்ற காலத்தில் அந்த இயக்கத்தின் தலைவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் சமுதாயத்தின் இயக்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து நமது இலக்கான பிரதிநிதித்துவத்தை அடைவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
* நீங்கள் பணியாற்றும் இஸ்லாமிய வங்கி குறித்து கூறுங்களேன்?
இஸ்லாமிய வங்கி என்பது ஏதோ முஸ்லிம்களுக்கான வங்கி என யாரும் நினைத்து விடக் கூடாது. அப்படி நினைத்தால் அது தவறு. பொருளாதாரச் சுரண்டலில் இருந்தும், வட்டிக் கொடுமையிலிருந்தும் அனைத்துத் தரப்பு மக்களையும் காப்பாற்றும் ஒரு சிறந்த, பொருளியல் திட்டம்தான் இஸ்லாமிய வங்கி முறை. இந்த வங்கி முறையே மிகச் சிறந்தது என உணர்ந்து மிகப் பெரிய பொருளாதார வல்லுநர்களால் அங்கீகரிக்கப்பட்டு, முஸ்லிம் நாடுகளையும் தாண்டி இப்பொழுது மேலை நாடுகள் கூட இதனை ஏற்று நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த வங்கி முறை இந்தியாவில் வர வேண்டும் என்று கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்பொழுது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ஹெச். அப்துர் ரகீப் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அரும் பாடுபட்டு வருகிறது.
1987இல் ராமகிருஷ்ண ஹெக்டே கர்நாடக மாநில முதல்வராக இருந்த போது அவருக்கு இஸ்லாமிய வங்கி குறித்து எடுத்துச் சொல்லி இருக்கிறேன். ரிசர்வ் பேங்க் அதிகாரிகளுக்கும் இது குறித்து விளக்கி இருக்கிறேன். ஆனால் துரதிருஷ்டவசமாக இஸ்லாமிய வங்கி முறை வந்து விடக் கூடாதென அதிகாரிகள் சிலர் செயல்பட்டதால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் இப்பொழுது இருக்கக் கூடிய காங்கிரஸ் தலைமையிலான அரசு இஸ்லாமிய வங்கி முறையை செயல்படுத்துவதற்கு முயற்சி செய்யும் என முழுமையான எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அப்துர் ரகீப் அவர்களின் தலைமையிலான குழுவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்வேன்.
* கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக சச்சார் குழு அளித்துள்ள பரிந்துரைகள் செயல்வடிவம் பெற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
எந்தத் துறை சார்ந்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டாலும் அதில் சமூக ரீதியாக சச்சார் குழு பரிந்துரைகள் செயலாக்கம் பெற தொடர்ந்து பாடுபடுவேன். பல மாநிலங்களிலிருந்து அகில இந்திய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 பேரையும் ஒன்றிணைத்து சச்சார் கமிட்டி பரிந்துரையை அமலாக்குவதற்கான அவசியத்தை அவர்களிடம் விளக்கி அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவேன். இது குறித்து ஏற்கெனவே காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சதீதுத்தீன் உவைசி எம்.பி. இலட்சத்தீவு எம்.பி. ஆகியோரிடம் விவாதித்து இருக்கிறேன். இதனடிப்படையில் அடுத்த 3, 4 மாதங்களுக்குப் பிறகு முஸ்லிம் எம்.பி.க்களின் குழு சமூக நீதியை வலியுறுத்தியும் மதநல்லிணக்கத்திற்காகவும் சிறுபான்மையினரின் உரிமைகளை மீட்பதற்கும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். இத்தகையக் கருத்தோட்டம் அனைத்து எம்.பி.க்களிடமும் காணப்படுகிறது. செயல்பாடுகளை வருகின்ற காலத்தில் காண்பீர்கள்.
* நீங்கள் வேலூர் தொகுதி எம்.பி. ஆக இருந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருகிறது என்பதை உணருகிறீர்களா?
நான் பெருமையாகக் கருதுகிறேன். அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் நான் ஒரு முஸ்லிம் லீக் உறுப்பினராக இருந்தாலும் கூட ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பதாக உணருகிறேன். அத்தகையக் கடமையும் உணர்வும் எனக்கு உண்டு. எந்த ஒரு பாகுபாடும் இன்றி இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் வலுப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் முஸ்லிம்களால் மட்டுமே இட்டுச் செல்ல முடியும் என்ற வரலாற்றை உண்மைப்படுத்தும் வகையில் என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
* "சமரசம்' 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது...
மிகுந்த மகிழ்ச்சி. 30 ஆண்டுகளாக சமுதாயப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிற சமரசத்திற்கும் சமரசக் குழுவிற்கும் வாழ்த்துகள். நான் சமரசத்தோடு மிகவும் சமரசமானவன். சமரசத்தைப் பொறுத்தவரையில் சொல்ல வேண்டிய விஷயத்தை யார் மனதும் புண்படாமல் வெளியிடுகிறீர்கள். இன்று ஆர்எஸ்எஸ்ஸும் பிஜேபியும் கூட பயன்படுத்தாத வார்த்தைகளை இன்று இருக்கக் கூடிய முஸ்லிம் வாராந்
திரப் பத்திரிகைகள் ஒருவரையொருவர் அவமானப்படுத்துவதற்கும் கேவலப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிற நேரத்தில் சமரசம் ஒரு நல்ல சமூகப் பணி ஆற்றிக் கொண்டிருக்கிறது. "சமரசம்' வீட்டிற்கு வந்து விட்டது என்றால் அதை நாம் படிப்பதற்கு முன்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தரக் கூடிய ஒரு நன்மதிப்பை சமரசம் பெற்றுள்ளது. சமரசப் பணிகள் தொடர என்னுடைய வாழ்த்துகள்.
சந்திப்பு : M. முஹம்மது கவுஸ்


ந‌ன்றி : ச‌ம‌ர‌ச‌ம் மாத‌மிருமுறை இத‌ழ்
ஜுலை 16 31, 2009
விரைவில் www.samarasam.net

முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் திடீர் சாலைமறியல்

முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் திடீர் சாலைமறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

முத்துப்பேட்டையில் தென்னை விவசாயிகள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் தென்பகுதி தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் முத்துப்பேட்டையில் கொப்பரை கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். தேங்காய்க்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) துரைராஜ், வேளாண்மை இயக்குனர் கல்யாணசுந்தரம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் நாளை (இன்று) முத்துப் பேட்டையில் நடத்தப்படும் விவசாயிகள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும், அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும் தென்னை விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால், முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை - பட்டுக்கோட்டை பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Monday, July 20, 2009

முத்துப்பேட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 வாலிபர்கள் கைது

முத்துப்பேட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 வாலிபர்கள் கைது
டிராக்டர் பறிமுதல்

முத்துப்பேட்டை, ஜுலை.20-
முத்துப்பேட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மணல் திருடிய 4 பேர் கைது
திருத்துறைப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி, ஏட்டுகள் மாரிமுத்து, ராஜேந்திரன், வில்பர்ட் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு முத்துப்பேட்டை கீழக்காடு பகுதியில் திடீர் சாராய வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பாமணி ஆற்றின் பாலத்தில் சிலர் அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்துவது தெரியவந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமு (வயது 28), பாக்கியராஜ் (27), உதயகுமார் (28), அய்யப்பன் (22) ஆகிய 4 பேரையும் பிடித்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
டிராக்டர் பறிமுதல்
மேலும், அவர்கள் பயன்படுத்திய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரத்திடம் அவர்களை போலீசார் ஒப்படைத்தனர்.

- தினத்தந்தி
From :
M.ABDUL MALIK ( SIA )

www.muthupetxpress.blogspot.com

Sunday, July 19, 2009

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.யின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற முதல்வர் கலைஞரின் திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புகள் உருவாக்கித்தர வேண்டும்.
இஸ்லாமிய வங்கி முறையை இந்தியாவில் தொடங்க வேண்டும்

நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு வேலூர் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசுகையில் குறிப்பிட்டதாவது.
மாண்புமிகு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த அவையில் தாக்கல் செய்த 2009- 2010-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை குறித்த எனது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளித்த மாண்புமிகு துணைத்தலைவர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிதிநிலை அறிக்கை சந்தேகத்திற்கிட மில்லாத வகையில் நடைமுறைப்படுத்தக் கூடிய பல விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது.
நாட்டில் அனைத்து தரப்பு மக்களுடைய உளப்பூர்வமான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துக் களின் அடிப்படையில் நமது நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இந்த நிதி நிலை அறிக்கையில் பசுமைப் புரட்சிக்கான புதிய சகாப்தம் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை நான் உளமாற பாராட்டுகிறேன். இந்த நிதிநிலை அறிக்கையில் சில முக்கிய திட்டங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 2014-ம் ஆண்டிற்குள் பாதியாக குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயமே இந்த நாட் டின் முதுகெலும்பாக திகழ்கிறது. விவசாய உற்பத்தி வருடத்திற்கு 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டிருக் கிறது. 2014-ம் ஆண்டிற்குள் கூடுதல் முதலீடு 9 சதவீதம் உயர்த்தப்படும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதார போட்டியின் சவால்களை சந்திக்க இந்திய தொழில்களுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்ய உறுதி கூறப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் 2 லட்சத்து 87 ஆயிரம் கோடியாக இருந்து 3 லட்சத்து 27 ஆயிரம் கோடி யாக உயர்த் தப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு 3 லட்ச ரூயாய் 7 சதவீத வட்டியின் கீழ் கடன் கொடுக்கப்படு கிறது. தவறாமல் கடனைத் திருப்பி செலுத்துகின்றவர்களுக்கு ஒரு சதவீத ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது. இவைகளெல்லாம் வரவேற்கத்தக்க விஷயங்கள்.
விவசாய - நெசவாளர்கள் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 2 ஏக்கருக்கு மேல் உள்ள நிலம் உள்ளவர்கள் கடன் தவணைகளை இந்த வருடம் டிசம்பர் 31-க்குள் 75 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என குறிப்பி டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள வர்கள் நிலை என்ன? என்பதை அறிய விரும்புகிறேன். நமது நாட்டில் சிறிய விவசாயிகள் தான் அதிகம் உள்ளனர். நான் சொல்ல விரும்புவது அந்த சிறிய விவசாயிக ளையும் பயன் அடையும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினர் மாதத்திற்கு 25 கிலோ கோதுமை அல்லது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் வாங்க லாம் என அறிவித்துள் ளீர்கள். அது பாராட்டுக்குரியது. அதேசமயம், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்ற திட்டத்தை அறிவித்து அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப் பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த திட்டத்தை மத்திய அரசு ஏன் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டில் கைத்தறி பூங்கா அமைப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை பாராட்டி வரவேற்கிறேன்.
நமது நாட்டில் மிக குறைந்த அளவில்தான் பெண்கள் படித்தவர்களாக உள்ளனர். அது மிக மிகப் பெரிய சவாலாக உள்ளது. தற்போது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மை மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய மகளிர் கல்வி மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள் ளது. வேலூர் நாடாளு மன்றத் தொகுதிக்குட்பட்ட பேரணாம்பட்டை சுற்றி 60 கி-மீட்டர் சுற்றள விற்குள் மகளிர் கல்லூரிகளே இல்லை. அந்த குறையை போக்கிடும் வகையில் அங்கு மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவ அரசை வேண்டுகிறேன்.
உயர்கல்விக்காக 200 கோடி ரூபாய் இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட குடியாத்தத்தில் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி கற்பதற்கு கல் லூரி அமைத்துத் தருமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தோல் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் என தொழில் செய்கின்றவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் உயர வேலூர் நாடாளுமன்றத்தொகுதியில் பெரிய அளவில் தொழிற் சாலைகள் தொடங்கி வேலை வாய்ப்புக்கள் அமைக்கப்பட வேண்டும்.
இந்த நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினரின் பல நோக்கு முன்னேற்றத் திட்டத்துக்கு ரூ.1740 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது போதுமானதல்ல. நீதியரசர் ராஜேந்திர சச்சார் அறிக்கை முஸ்லிம்களின் பரிதாப நிலைகளில் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி போதாது. இதற்கு அதிகமான நிதி ஒதுக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத் தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர்களான காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப், இப்ராஹீம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் உள்ளிட்டோர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீரமிக்க குரல் எழுப்பியுள்ளனர். அவர்கள் இந்த சமுதாயங்களின் உயர்வுக்காக அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுக்காக இந்த அவையில் குரல் எழுப்பியதை நான் நினைவு கூர விரும்புகிறேன்.
மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலத்தின் மலப்புரத்தில் அலிகர் முஸ்லிம் சர்வகலா சாலையில் புதிய கிளைகள் ஆரம் பிக்கப்பட ரூ.25 கோடி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறேன்.
உலகப் பொருளாதாரம் 1.3 சதவீதம் இந்த வருடத் தில் உயரும் என சர்வதேச நிதி ஆணையம் அறிவித் துள்ளது. இதில் இந்தியா வின் பொருளாதாரம் ஏப்ரல் 2009லேயே 4.5 சதவீத வளர்ச்சியை எட்டி விட் டது. 5.4 சதவீதம் வரை இது உயரும் என சொல்லப்பட் டுள்ளது. எதிர்கால இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கி றது என்பது இதன் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
வங்கிகளுக்கு சாதகமான பல திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இஸ்லாமிய வங்கி முறை திகழ்கிறது. ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடு களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய வங்கி முறை உலக அளவில் வெற்றிகர மாக நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. வட்டி, நிலுவைத் தொகை செலுத்த முடியாதவர்க ளுக்கு நிவர்த்தி செய்யக் கூடிய ஒரு முறையாக இஸ்லாமிய வங்கி முறை அமைந்துள்ளது. வர்த்தக நோக்கின் அடிப்படையில் இந்த வங்கி முறை செயல் படுகிறது. உலக அளவில் பொருளாதார நிபுணர்கள் இஸ்லாமிய வங்கி முறையை வரவேற்றுள்ள னர். ஜாதி மதங்களை கடந்து ஐரோப்பிய மேற் கத்திய மற்றும் அரபுலக நாடுகளில் இஸ்லாமிய வங்கி நிறுவப்பட்டுள்ளது. இந்த வங்கி முறை அனைத்து மக்களுக்கும் தெளிவான ஒரு முறையாக உலகில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது இந்தி யாவில் நடைமுறைப் படுத்தப்பட்டால் வங்கித் துறையில் முன்னேற்றம் காணலாம்.
சமீபத்தில் ரகுராம் ராஜன் தலைமையிலான குழுவினர் இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை நிறுவ இந்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உலக இஸ்லாமிய வங்கி அமைப்போடு ஒருங்கி ணைப்புச் செய்ய இந்திய அரசு விரும்பினால் நான் அதற்காக இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். அவர்களை அழைத்து வருவதாக இருந்தாலும் கலந்தாய்வு செய்வதாக இருந்தாலும் அதற்கு நான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன்.
உலகப் பொருளாதார நெருக்கடியால் அனைத்து வங்கிகளும் பாதிக்கப்பட்ட நிலை யில் இஸ்லாமிய வங்கி முறை எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டிருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
எச்.எஸ்.பி.சி.., சிட்டி வங்கி உள்ளிட்ட சர்வதேச வங்கிகள் நடைமுறையில் உள்ள வங்கி முறைகளோடு அதற்கு அப்பாலும் இஸ்லாமிய வங்கிக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தி மாற்றத்தகுந்த வங்கி முறையை ஏற்படுத்தியுள்ள னர். இதில் கவனிக்கத்தக்க ஒன்று என்னவெனில், நமது நாட்டில் நடைமுறையில் உள்ள வங்கி சேவைகளை விட இஸ்லாமிய வங்கி முறையின் பிரிவில் அதிக வருமானம் வந்துள்ளது.
எனவே, இஸ்லாமிய வங்கியை இந்தியாவில் நிறுவ நான் வலியுறுத்து கிறேன்.
இவ்வாறு எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. பேசுகையில் குறிப்பிட்டார்.

Monday, July 13, 2009

Thursday, July 9, 2009

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட்

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க

முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட்

திருவாரூர் எஸ்பி பேட்டி

திருவாரூர், ஜூலை 9:
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடற்கரை பகுதியான முத்துப்பேட்டையில் புதிதாக மேலும் 2 செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது என்று திருவாரூர் மாவட்ட எஸ்பி பிரவீன் குமார் அபினபு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று காலை நிருபர்களிடம் கூறியது:
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழகம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தீவிர ரோந்து பணி நடைபெற்றுவருகிறது. இதையட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடற்கரையோர பகுதியான முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 18கி.மீ தூரம் வரை திருவாரூர் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டில் ஜாம்புவானோடை, கற்பகநாதர் குளம், தம்பிகோட்டை கீழக்காடு உள்ளிட்ட 7 ஊராட்சிகள் உள்ளன. இங்கு கோபால சமுத்திரம், தில்லைவிளாகம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை ஆகிய 4 இடங்களில் நிரந்தரமாக செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விளாங்காடு, கரையாங்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக 2 தற்காலிக செக்போஸ்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்களில் கடற்கரையோரங்களில் ரோந்து பணி நடந்து வருகிறது. 9 பேர் அடங்கிய ஒரு குழுவுக்கு அனைத்து நவீன ரக ஆயுதங்கள் வழங்கப்பட்டு சிறப்பு அதிரடி படை உருவாக்கப்பட்டுள்ளது. பொதுவாக திருவாரூர் மாவட்டத்துக்குள் நுழைய லகூனை கடந்து தான் வரவேண்டும். இங்கு கடல் மார்க்கமாக நுழைய வாய்ப்புகள் குறைவு. இப்பகுதியிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

From :
M.ABDUL MALIK ( SIA )
www.muthupetxpress.blogspot.com

Tuesday, July 7, 2009

சுன‌னுந் ந‌ஸாயீ ந‌பிமொழி நூல் வெளியீடு!!!


சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் நூல் வெளியீடு
சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் சுன‌னுந் ந‌ஸாயீ ( பாக‌ம் ஒன்று ) வெளியீட்டு விழா 04 ஜுலை 2009 ச‌னிக்கிழ‌மை மாலை 5 ம‌ணிக்கு ஃபைஸ் ம‌ஹாலில் வெளியிட‌ர்க‌ள்

Saturday, July 4, 2009

மத்திய அமைச்சருடன் முத்துபேட்டை அதிரைப் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு ஏன்? புதிய தகவல்!


நமதூரின் நலம் கருதியும், வெகு விரைவில் நமதூருக்கு அகல ரயில்பாதை துரிதமாக அமைக்கப்பட்டு செயல்படவும் ஊர்நலனில் அக்கரையுள்ள நமதூர் முக்கியஸ்தர்கள் என்றும் முழு முயற்ச்சியில்தான் இருக்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவரும் ரயில்வே இணை அமைச்சருமான ஜனாப் இ. அஹமது (கேரளா) அவர்களை

ஜனாப் ஜே.எம். இக்பால் ஹாஜி,
ஏ.ஜெ. அப்துல் ரஜாக் (வக்கீல்) ஹாஜி,
ஜனாப் எம்.எஸ்.தாஜுத்தீன் ஹாஜி,
ஜனாப் ஏ.அப்துல் ரஜாக் ஹாஜி(Chasecom)
ஜனாப் ஏ.ஆர்.அமானுல்லாஹ் ஹாஜி

மற்றும் முத்துபேட்டையைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களும் நேரில் சந்தித்து அகல ரயில்பாதைப் பணியை (தற்போது திருவாரூர் - காரைக்குடிதான், மயிலாடுதுறை திருவாரூர் இணைப்பு முடிந்துவிட்டது) நடப்பாண்டு பட்ஜெட்டில் சேர்க்கவும் கொடுத்தார்கள்!
ஜுலை 3ம் தேதி ரயில்வே பட்ஜெட் டில்சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சி பயன் தரவில்லை என்றாலும்

அல்லாஹ் அவர்களின் இம்முயற்சிக்கு நல்ல பிரதிபலனையும் அவ்வாறு முயற்சி செய்வதற்காக வெற்றியை வெகுமதியாக வழங்குவானாக!


உங்கள் சேவையை தொடர வேண்டும்...!

Thursday, July 2, 2009

சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் நூல் வெளியீடு


சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் நூல் வெளியீடு
சென்னையில் ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் ந‌பிக‌ளாரின் பொன்மொழிக‌ள் சுன‌னுந் ந‌ஸாயீ ( பாக‌ம் ஒன்று ) வெளியீட்டு விழா 04 ஜுலை 2009 ச‌னிக்கிழ‌மை மாலை 5 ம‌ணிக்கு ஃபைஸ் ம‌ஹாலில் வெளியிட‌ப்ப‌ட‌ இருக்கிற‌து.
த‌லைசிற‌ந்த‌ மார்க்க‌ அறிஞ‌ர்க‌ளும், சான்றோர் பெரும‌க்க‌ளும் சிற‌ப்புரை ஆற்ற‌ இருக்கின்ற‌ன‌ர். இவ்விழாவில் அனைவ‌ரும் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.
ர‌ஹ்ம‌த் அற‌க்க‌ட்ட‌ளை குர்ஆன் - ஹ‌தீஸ் த‌மிழாக்க‌ப் ப‌ணியில் ஒரு முன்னோடி நிறுவ‌ன‌மாகும்